ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மீண்டும் நிரந்தரத்தை வென்றனர், அதே நேரத்தில் மோடி சர்க்கார் தொழிலாளர்களின் உரிமைகளை ரத்து செய்கிறார்

மும்பை பெருநகர மாநகராட்சியில் (எம்.சி.ஜி.எம்) பணியாற்றும் 580 ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியை புதிய தொழிற்சங்க முன்முயற்சி (என்.டி.யு.) அதன் சகோதர நிறுவனமான கச்ரா வஹாதுக் ஷ்ரமிக் சங்கம் (கே.வி.எஸ்.எஸ்) மற்றும் அதன் உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டாடுகிறது.

2021 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மும்பை (.டி) தொழில்துறை தீர்ப்பாயத்தின் உத்தரவு, இப்போது கிடைத்துள்ளது. அந்த உத்தரவின்படி, தொழிலாளர்கள் 240 நாட்கள் வேலையை முதன்முதலில் எப்போது நிறைவு செய்தார்களோ அந்த ஆண்டிலிருந்து நிரந்தரத்தை உறுதி செய்கிறது. எம்.சி.ஜி.எம் ஏற்படுத்திய ஒப்பந்தக்காரர்கள் மற்றும் துணை ஒப்பந்தக்காரர்களின் முழு ஏற்பாடும் முற்றிலும் சட்டவிரோதமானது என்று அந்த உத்தரவு சொல்கிறது.

நம் நாடு முழுவதும் உள்ள நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் வரலாற்று ரீதியாக வஞ்சிக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் தன்னார்வலர்கள், கவுரவத் தொழிலாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது குட்டும்பஸ்ரீ தன்னார்வலர்கள் அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள் என முத்திரை குத்தப்பட்டு சட்டரீதியான தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்படாமல் உரிமைகளை இழக்கிறார்கள். இதனால், வார விடுமுறை, ஊதியத்துடனான நோய்வாய் விடுப்பு மற்றும் வருடாந்திர விடுப்பு, கூடுதல் நேர (OT) ஊதியங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு உட்பட சட்டப்படி ஒரு தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய எல்லா உரிமைகளும் மறுக்கப் படுகின்றன. அவர்கள் பயங்கரமான பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் வேலை செய்கிறார்கள். அதே வேலையைச் செய்யும் நிரந்தர தொழிலாளர்கள் சம்பாதிக்கும் ஊதியத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் சம்பாதிக்கிறார்கள்.

தொற்றுநோயையும் அதற்கு முந்தைய எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடும் நமது நகரங்கள் மற்றும் பெருநகரங்களின் முன்னணியில் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர். எல்லா வகையான கழிவுகளிலிருந்தும் மக்கள் வசிக்கும்இடங்களை சுத்தமாக வைத்திருக்க அவர்கள் தங்கள் பாதுகாப்பை பற்றிக்கூட கவலைப்படாமல் ஆபத்தான சூழல்களில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அகற்றும் கழிவுகளில் நச்சுத் தன்மையும் உடலை பாதிக்கும் அபாய கிருமிகளும் இருக்கின்றன. வேறு தொழிலாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டவர்களாகவே துப்புரவு தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது பாஜக அரசாங்கமும் கோவிட் போர்வீரர்களுடன்நிற்கிறார்கள் என்று நேர்மையற்ற முறையில் கூறிய காலத்தில், அரசாங்கம் ஸ்வச் பாரத்மீது ஏராளமான பணத்தை வாரி இறைத்த நேரத்தில் ஸ்வச் பாரத்பெரும்பாலும் தனியார் ஒப்பந்தக்காரர்களின் கைப்பாவையாகத்தான் ஆகியுள்ளது.

தொழில்துறை தீர்ப்பாயத்தின் உத்தரவு 580 தொழிலாளர்கள் 22 ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் முடிவில் வந்திருக்கிறது. தொழிலாளர் ஆணையர் முன் 7 ஆண்டுகள் மற்றும் தீர்ப்பாயத்தின் முன் 15 ஆண்டுகள் செலவிடப்பட்டன. இதைப்பற்றி நிர்வாகத் துறையும் நீதித்துறையும் சிந்திக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதி வாழ்க்கை இந்த வழக்கை சந்தித்து, அதிலேயே கழிந்துவிட்டது. இதே போன்ற தொழிலாளர்கள் போராட்டங்களின் மூலம் 2006 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே 1200 மற்றும் 2700 ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களை முறைப்படுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தபோது, கே.வி.எஸ்.எஸ். முன்னின்று முன்மாதிரியைப் படைத்தது. அப்படிப்பட்ட முன்மாதிரிகளை எல்லாம் தாண்டி வன்மம் வாய்ந்த அரசியல் வர்க்கமும் குறுகிய மனம் கொண்ட நிர்வாக துறையும் இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை இன்னுமொரு தசாப்தம் இன்னுமொரு பத்தாண்டுகள் தொழிலாளர்கள் போராட வேண்டி வரும்.

இந்த போராட்டத்தின் மூலம் வென்ற உரிமைகள் தான் ஒரு வார விடுமுறை, நோய்வாய் விடுப்பு, விடுமுறை ஊதியம், சுகாதார நலன்கள் மற்றும் ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்புகள் ஆகியவற்றுடன் ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலைக்கு வழக்கமான முறையான ஊதியம் பெறுவதற்கான உரிமை. இந்த உரிமைகளை பறிப்பதற்காகத்தான் திரு. மோடி மற்றும் அவரது பாஜக அரசாங்கம் தொழிலாளர் குறியீடுகள் (Labour codes) கொண்டு வந்திருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் சோர்வடைந்து போராட்டத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தொழிலாள வர்க்கத்திற்கு நீதியை தாமதப்படுத்த முற்படுபவர்கள், இந்த போராட்டம் எந்த காரணத்தினாலும் நிறுத்தப்படாது என்பதை அறிந்து கொள்ளட்டும்.

நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகளை அழிப்பதில் தாங்கள் வெற்றி பெற்றோம் என்று நம்புபவர்கள் கவனத்தில் கொள்ளட்டும், இந்த போராட்டம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு போராட்டமும் தொழிலாளர் குறியீடுகளை (Labour codes) திரும்பப் பெற கட்டாயப்படுத்தும்.

சம வேலைக்கு சம ஊதியம், இன்றைய வெற்றி. அடிப்படை தொழிலாளர் உரிமைகளுக்கான வெற்றி. தொழிலாள வர்க்கத்தில் ஒரு பிரிவினர் மீது நிகழ்த்தப்படும் ஓரவஞ்சனைக்கு எதிரான தோல்வி.

நாம் இந்த வெற்றியை கொண்டாடும் அதே நேரம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஜனநாயக மற்றும் போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கம் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காது. இந்தச் செய்தியை வெளி உலகிற்கு பறைசாற்றி சொல்லுவோம். தொழிலாள வர்க்கம் அநீதிக்கு சரணடையாது. தொழிலாளர்களை இழிவுபடுத்துவதற்கும் அடிபணியச் செய்வதற்கும் அரசாங்கமும் முதலாளிகளும் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளால் தொழிலாள வர்க்கம் பாதிக்கப்படாது. இந்த போராட்டம், நமது போராட்டம், நீதிக்கான போராட்டம், நியாயத்திற்காக, கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கான போராட்டம். இந்தப் போராட்டம் தொடரும்.

இந்த போராட்டம் முன்னிறுத்துவதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் – 22 ஆண்டுகள் போராட்டம் இன்னும் தொடர்கிறது தொழிலாள வர்க்கத்தின் உறுதியை யாராலும் அசைக்க முடியாது.

கவுதம் மோடி

பொதுச்செயலர்